இன்றைய காலத்தில் முதலீட்டுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும், நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவே அதிகம் விரும்புகின்றனர். அதனால் அரசு ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டங்கள், குறிப்பாக போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள், அதிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்றாக விளங்குவது “நேர வைப்புத் திட்டம்” (Post Office Time Deposit). இது வங்கிகளில் உள்ள Fixed Deposit திட்டத்துக்கு இணையானதாக இருந்தாலும், சில நேரங்களில் அதைவிட அதிக வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தில் வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என தேவைக்கேற்ப கால அளவை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்தாலே கணக்கு தொடங்க முடியும். அதிகபட்ச முதலீட்டிற்கு எந்த வரம்பும் இல்லை என்பது கூடுதல் நன்மையாகும்.
நடப்பு ஆண்டில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பின்வருமாறு: 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுக்கு 7.0%, 3 ஆண்டுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இவை அரசு உத்தரவாதத்துடன் கிடைப்பதால் முழு பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர் ரூ.3 லட்சத்தை 3 ஆண்டுகள் கால அளவிற்கு முதலீடு செய்தால், 7.1% வட்டி விகிதத்தின் அடிப்படையில் சுமார் ரூ.70,551 வட்டி கிடைக்கும். கால அவகாசம் முடிவில், முதலீட்டுத் தொகையான ரூ.3 லட்சத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.3,70,551 வழங்கப்படும்.
இதனால், போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தையும் முழு பாதுகாப்பையும் வழங்கும் ஒரு நம்பகமான சேமிப்பு வழியாக திகழ்கிறது.
