Sunday, February 15, 2026

‘தன்மானமுள்ள கட்சி அதிமுக’ – ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கூட்டணி என்பது தானாக அமைய வேண்டும். கனி தானாக பழுத்தால்தான் சுவையாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படி அமைந்ததுதான்.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கேட்கிறார் திருமாவளவன். திமுக – காங்கிரஸ் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்பது சந்தேகம்தான்.

தன்மானமுள்ள கட்சி அதிமுக. திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பினாலும் அது எடுபடாது. பொய் கூறி, விளம்பரத்தை மட்டுமே நம்பி மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.

தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைக்கிறார். ஆட்சியில் என்ன தவறு என்பதை சுட்டிக்காட்டிங்கள். நான் பதில் அளிக்கத் தயார். அதிமுக ஆட்சியில் என்னென்ன சாதனை செய்தோம். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை பொது மேடையில் விவாதிக்கத் தயார்.

அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய சூழலில் சக உறுப்பினர்கள் தேர்வு செய்தே நான் முதல்வரானேன். படிப்படியாக உழைத்து இந்த பொறுப்பைப் பெற்றுள்ளேன். ஆனால், மு.க. ஸ்டாலின் தனது அப்பா வழியில் முதல்வரானார்.

கருணாநிதி உடல்நிலை குன்றியிருந்தபோது கூட ஸ்டாலினுக்கு தலைவர் பொறுப்பை வழங்கவில்லை. ஏனென்றால், அவர் பொம்மை நபர். செயல்தலைவர் பொறுப்புதான் வழங்கப்பட்டது.

எந்த இடத்தில் மேடை அமைத்து விவாதிக்க அழைத்தாலும் நான் தயார். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை நான் கூறுகிறேன். அவர்கள் ஆட்சி குறித்து அவர் பேசட்டும். மு.க. ஸ்டாலினுடன் விவாதிக்கத் தயார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 6,999 சிறுமிகள் திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதுவரை சட்டம் – ஒழுங்கு டிஜிபியை திமுக அரசு நியமிக்கவில்லை. இதனால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவலர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.

தமிழ்நாட்டில் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 வசூலித்து, ஊழல் டெண்டர் முறைகேடு மூலம் இதுவரை 23 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2010 வரை 100க்கு 52% பேர் உயர்கல்வி பயின்றனர். தற்போது 42% ஆக குறைந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் 5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு லட்சம் பேர்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், உணவுப் பொருள்கள் விலையை கட்டுக்குள் வைத்திருந்தது அதிமுக அரசு என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related News

Latest News