கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம் பகுதியில் உள்ள செருபுழாவைச் சேர்ந்த அம்பத்து இலியாஸ் (62) கடந்த 40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர். விவசாயத் துறையில் அவரது சாதனைகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தனது பண்ணை நிலத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் அவர் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்றவர்கள் அவரைக் கவனித்து மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார்.
இலியாஸ் குத்தகை நிலங்களிலும், தனது சொந்த நிலத்திலும் பல்வேறு பயிர்களை வளர்த்து வந்தார். கண்ணூர் மற்றும் அருகிலுள்ள காசர்கோடு பகுதிகளிலும் பலவிதமான காய்கறி தோட்டங்களை அமைத்திருந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட விளைச்சல் குறைவு மற்றும் போதிய விலை இல்லாத நிலை காரணமாக அவர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததாக உறவினரான ஷின்டோ தெரிவித்துள்ளார். இதனால் இலட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விவசாயத்திற்காக பல விருதுகள் பெற்றிருந்த ஒரு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
