ஜம்மு-காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயினை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று இரவு எல்லையோர கிராமங்களில் வசிக்கும் சிலர், சந்தேகத்திற்கிடமாக ஒரு டிரோன் பறந்து வந்து, ஒரு பொட்டலத்தை கீழே வீசியதை கவனித்தனர். உடனடியாக அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து எல்லைப் பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது விவசாய நிலங்களில் இருந்து ஹெராயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டன.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு சம்பவத்தில், கதுவா மாவட்ட எல்லைப் பகுதியில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி ஜதின் மற்றும் டேனிஷ் டோக்ரா என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர்கள் பாகிஸ்தான் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
