ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டம் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், தனது சொந்த இடத்தில யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால், யூடியூபில் அவருக்கு எதிர்பார்த்த அளவில் பின்தொடர்பவர்களும் ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஸ்டுடியோவிற்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டிக்கொண்ட அவர், அங்கிருந்த உபகரணங்களுக்கு தீ வைத்தார். வீட்டில் திடீரென புகை பரவியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர்.
அண்டை வீட்டாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கணினிகள், கேமராக்கள், சவுண்ட் சிஸ்டம், மின்விளக்குகள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
