மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் (66) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
விமானம் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த கோர விபத்தில், அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணம் செய்த அவரது 2 பாதுகாவலர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
அஜித் பவாரின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
