இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்…

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யூபிஐ (UPI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இணைய வசதி இல்லாத இடங்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியாதது பயனர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.

குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களின் நிலத்தடி பகுதிகள், விமானப் பயணங்கள், தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.

இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய ஆஃப்லைன் டிஜிட்டல் கட்டண வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இதன்படி, முன்னணி நிறுவனங்களின் PoS (Point of Sale) இயந்திரங்களில் NFC (Near Field Communication) தொழில்நுட்பம் மூலம் இணையம் இல்லாமலேயே ரூ.2,000 வரை பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட உள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த, பயனர்கள் முதலில் தங்களது டிஜிட்டல் வாலெட்டில் பணத்தை முன்கூட்டியே ஏற்ற வேண்டும். அதன் பிறகு, மொபைலில் உள்ள NFC வசதியை பயன்படுத்தி PoS இயந்திரத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே கட்டணம் செலுத்த முடியும்.

தற்போது PoS இயந்திரங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யூபிஐ மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் நிலையில், புதிய வசதி டிஜிட்டல் கட்டணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2,000 வரை மட்டுமே பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கப்படுவதால், மோசடி மற்றும் நிதி திருட்டு அபாயமும் குறையும். இதற்காக PoS சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிய செயலிகளை உருவாக்க வேண்டும்.

இந்த புதிய வசதி, 2023-ல் அறிமுகமான UPI Lite X ஆஃப்லைன் சேவையின் அடுத்த கட்டமாகும். 2024-ல் NFC மூலம் இரு நபர்களுக்கிடையேயான ஆஃப்லைன் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான PoS அடிப்படையிலான ஆஃப்லைன் கட்டண முறையை NPCI விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

Related News

Latest News