உலகில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அதிக மதிப்புமிக்க உலோகங்களில் தாமிரமும் ஒன்று. மின்சார மோட்டார்கள், போர் விமானங்கள், solar panel-கள், காற்றாலை மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் தாமிரத்தின் பங்கு அவசியமானது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாகவும் இதற்கு அதிக தேவை உருவாகியுள்ளது.
2024ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, சிலி உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளராக 5.3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது. அதன் பின்னர் காங்கோ ஜனநாயகக் குடியரசு 3.3 மில்லியன் மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய உற்பத்தியில் இது 11 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது.
பெரு 2.6 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன் முக்கிய சுரங்கமான செரோ வெர்டேயில் உற்பத்தி குறைந்ததால் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. சீனா 1.8 மில்லியன் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்துள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தில் முன்னணியில் நீடிக்கிறது.
இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா தலா 1.1 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியுடன் அடுத்த இடங்களில் உள்ளன. இந்தோனேசியாவின் கிராஸ்பெர்க் சுரங்கம் மற்றும் அமெரிக்காவின் மோரென்சி சுரங்கம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. ரஷ்யா 930,000 மெட்ரிக் டன்களுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மூன்று மாதங்களில் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு சுமார் 1,500 டாலர் உயர்ந்துள்ளது. இதனால், 2024ஆம் ஆண்டில் செம்பு விலை மொத்தம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் தாமிரம் 10,920 அமெரிக்க டாலர் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
