முதல்வர் விஜய்யின் முதல் கொடியேற்றம்: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!

நாட்டின் 80வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல் முறையாக ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கொடியேற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்ற உள்ளார். இதையொட்டி ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் விஜயின் முதல் சுதந்திர தின உரை மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

Related News

Latest News