ஒரு பெண் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கேன்னடி என்று சொல்லப்படும் JFK சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரிடம் இருந்த பாஸ்போர்ட்-ல் “Torenza” என்ற பெயரில் ஒரு நாட்டின் அடையாளம் இருந்ததாக வீடியோக்களில் கூறப்பட்டது.
அந்தப் பாஸ்போர்ட் மிகவும் உண்மையானது போல் தோன்றியதாம். ஹாலோகிராம், பையோமெட்ரிக் சிப், அங்கீகரிக்கப்பட்ட முத்திரைகள் அனைத்தும் இருந்ததாக கூறப்பட்டது. அவரை விசாரித்த அதிகாரிகள் ‘இந்த நாடு உலக வரைபடத்தில் இல்லை’ என்று அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர் கூறிய நாட்டின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது என்றும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டது.
அதன்பிறகு, இணையம் முழுக்க இதை ‘ஒரு வேறு உலகத்தை இருந்து வந்த பெண்’ என்ற கதையாக வலம் வந்தது. பலர் இதை “parallel universe” சம்பவம் என்று நம்பத் தொடங்கினர். சிலர் இதை 1950களில் பரவிய “The Man from Taured” என்ற பழைய கதையுடன் ஒப்பிட்டனர்.
ஆனால் சில நாட்களிலேயே உண்மை வெளிவந்தது. JFK விமான நிலைய அதிகாரிகள், அமெரிக்க குடியுரிமை மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவை இத்தகைய எந்தப் பதிவும் இல்லை என்று உறுதியாக தெரிவித்தன. பல ஊடகங்கள் விசாரித்தபோது, அந்த வீடியோ AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக தெரியவந்தது.
அதாவது, உண்மையில் “Torenza” என்ற நாடு இல்லை, அந்தப் பெண்ணும் இல்லை. முழுக்க முழுக்க ஒரு கற்பனை, AI-generated hoax. அந்தக் கதை நிஜம் இல்லாதது என்றாலும், ‘அது உண்மையா?’ என்ற சந்தேகம் எழுப்பிய விதம், மனிதர்களின் அறியாத உலகங்களைப் பற்றிய ஆர்வத்தையும், AI எப்படி நம்ப வைக்கக்கூடிய பொய்களை உருவாக்க முடிகிறதையும் வெளிப்படுத்துகிறது.
