அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு 50% வரி விதித்துள்ளார். இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தாமதமடைந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டெபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையிலான 21 பேர், அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் செமிகண்டக்டர் உற்பத்தி, சுகாதாரம் மற்றும் எரிசக்தி துறைகளில் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் சார்ந்து கொண்டிருக்கின்றன என்றும், சீனாவின் ஆதிக்கத்தை சமநிலையில் வைத்திருக்க இந்தியாவின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக வரிகள், அந்த நாட்டை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் நெருக்கமாகச் சேர்த்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் வணிக மற்றும் அரசியல் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளை ரத்து செய்யவும், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம், எதிர்காலத்தில் அமெரிக்கா–இந்தியா உறவுகள் எந்த திசையில் கொண்டுசெல்லும் என்பதைக் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
