ரிசர்வ் வங்கி ‘பச்சைக்கொடி’.., இனி பிளிப்கார்ட்டிலும் ‘கடன்’ வாங்கலாம்

கடன் வேண்டுமென்றால் வங்கிகளுக்குத் தான் செல்ல வேண்டும் என்னும் நிலை, தற்போது இல்லை. இருக்கும் இடத்திலேயே கடனுக்கு விண்ணப்பித்து, தேவைப்படும் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென எக்கச்சக்க கடன் செயலிகள் வந்துவிட்டன.

அந்தவகையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், தற்போது கடன் சேவையிலும் கால் பதித்துள்ளது. இதற்காக வங்கி சாரா நிதி நிறுவன உரிமமான NBFCயை, ரிசர்வ் வங்கியிடம் பிளிப்கார்ட் பெற்றுள்ளது.

இதன் மூலம் வங்கிகள் போல பிளிப்கார்ட் நிறுவனம் அதன் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இனி நேரடியாக கடன்களை வழங்க முடியும். இந்தியாவில் ஒரு பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி இந்த உரிமத்தை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

ரிசர்வ் வங்கி பச்சைக்கொடி காட்டினாலும் இன்னும் சில நடைமுறை வேலைகள் இருப்பதால், பிளிப்கார்ட் கடன் சேவையை சில மாதங்கள் கழித்தே தொடங்கும் என்று தெரிகிறது. அதேநேரம் கடன் வழங்குவதற்கான உரிமையை பெற்றிருந்தாலும், டெபாசிட் அதாவது வைப்புத்தொகையை பிளிப்கார்ட் ஏற்காது.

கடந்த 2007ம் ஆண்டு சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று இந்தியாவின், மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை, அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News