தலைவலி, காய்ச்சல் என உடல்நிலை சற்றே குறைவுபட்டால் கூட பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சிலர் மருந்து கடை காரர்களிடமே கேட்டு மாத்திரைகளை பெற்று செல்வார்கள்.
ஆனால், Self Medication என அழைக்கப்படும் இந்த சுயமருத்துவமுறை மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதனை தவிர்க்கவே 2016ஆம் ஆண்டு இந்திய மத்திய சுகாதாரத்துறை மாத்திரை அட்டையில் உள்ள முக்கிய குறியீட்டுக்கு விளக்கம் அளித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விளக்கத்தை சுகாதார துறை அளித்திருந்தாலும் பலரும் இதைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மாத்திரை அட்டையில் சிகப்பு கோடு இருந்தால், அந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் Antibiotics மாத்திரைகளில் தான் இந்த சிகப்பு கோடு பயன்படுத்தப்படுகிறது. Antibiotic மாத்திரைகள் அவ்வளவு ஆபத்தானவையா என்ற கேள்வி எழலாம்.
ஆனால், சாதாரணமாக antibiotic மாத்திரைகளை அடிக்கடி எடுத்து கொள்பவர்களுக்கு சிறுநீர்பாதை தொற்று உள்ளிட்ட தீவிர தொற்றுக்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் antibiotic மருந்துகள் செயல்பட முடியாத நிலைக்கு உடல் தள்ளப்படும்.
இது AMR, அதாவது Anti Microbial Resistance நிலை ஆகும். இது போன்ற நாள்பட்ட விளைவுகளை தவிர்க்கவே சிகப்பு கோடு இருக்கும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ள கூடாது என சுகாதார துறை எச்சரிக்கிறது. இதனால், மாத்திரைகள் வாங்கும் போது expiry dateஐ கவனிப்பது போல சிகப்பு கோட்டையும் கவனிக்க வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலாக உள்ளது.