வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்திலுள்ள வாலேஸே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர். 30 வயதாகும் இவர், சென்ற ஆண்டு தனது வீட்டருகே உள்ள பூங்காவுக்குள் அமைந்திருக்கும் கடைக்கு முகக் கவசம் அணிந்து சென்றார். அப்போது முகக்கவசத்தை சிறிதளவு தளர்த்திய நிலையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தார்.
ஷாப்பிங் செய்ததும் கடையை விட்டு வெளியேறிய அவரை ஓடிவந்து காவல்துறையினர் சூழ்ந்துகொண்டனர். அவர் முகக்கவசத்தைத் தளர்த்திய நிலையில் ஷாப்பிங் செய்வதைப் பார்த்த போலீசார் அவரது பெயர், முகவரியைக் குறிப்பெடுத்துக்கொண்டனர்.
பின்னர், 100 டாலர் அபராதம் விதித்துக் குற்றப்பதிவு அலுவலகத்திலிருந்து கிறிஸ்டோபருக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்தைப் பார்த்துத் திகைத்துப்போன கிறிஸ்டோபர் வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் செலுத்தத் தயாராக இல்லையென்று பதில் அனுப்பினார்.
அந்தக் கடிதம் காவல்துறை அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அபராதத் தொகை 2 ஆயிரம் டாலராக அதிகரிக்கப்பட்டது. இதுபற்றியும் தனது நிலைப்பாட்டை மின்னஞ்சல் மூலம் காவல்துறைக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சிறிதுநேரம் முகக்கவத்தைத் தளர்த்தியதாகக் கூறிய கிறிஸ்டோபரின் கருத்தைக் காவல்துறை அதிகாரிகள் ஏற்காமல், அபராதம் விதித்துவிட்டனர். இந்த சம்பவம் 2021 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நிகழ்ந்தது என்றாலும், தற்போது வலைத்தளங்களில் இந்த சம்பவம் பரபரப்பாகி வருகிறது.