விவாக ரத்துக்குக் காரணம் போக்குவரத்து நெரிசல் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக, விவாக ரத்துக்குப் பல காரணங்களைச் சொல்வார்கள். அதில் தம்பதிக்கிடையே கருத்தொற்றுமை இன்மையே பிரதானமாக இருக்கும். பொருளாதாரக் காரணம், கல்வித் தகுதி, இருவரின் சமூக அந்தஸ்து என வேறுபலக் காரணங்களும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா. சமீபத்தில் நிருபர்களிடம் சொன்ன கருத்து மீம்ஸ்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் மோசமான சாலைகள் குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அம்ருதா ஃபட்னவிஸ்,
மும்பையில் போக்குவரத்து காரணமாக மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு நேரம் கொடுக்க முடியாததால் 3 சதவிகித விவாகரத்துகள் நடக்கின்றன என்றார்.
அம்ருதாவின் இந்தக் கருத்து உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது.
அவரது இந்தக் கருத்தை அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் எந்த நகரத்திலாவது மோசமான சாலைப் போக்குவரத்து காரணமாக விவாக ரத்து நடந்தது உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ்களையும் ஜோக்குகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
எப்போதுமே அரசியல்வாதிகள் வித்தியாசமாகத்தானே சிந்திப்பார்கள்….அம்ருதாவும் அந்த ரகம் தானோ?