5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நடைபெற உள்ள நிலையில், இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்த நான்கு நாட்களாக 23 சுற்றுகள் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை, ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ள நிலையில், தொடர்ந்து 5வது நாளாக இன்றும், 5G அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடியை முன்வைப்பு தொகை செலுத்தியுள்ளது. ஏா்டெல் நிறுவனம் 5 ஆயிரத்து 500 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதி புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஜியோ நிறுவனத்துக்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 830 புள்ளிகள் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன. ஏா்டெல்க்கு 66 ஆயிரத்து 330 புள்ளிகளும், வோடபோன் – ஐடியா நிறுவனத்திற்கு 29 ஆயிரத்து 370 புள்ளிகளும், அதானி நிறுவனத்திற்கு ஆயிரத்து 650 புள்ளிகளும் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.