சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பில், கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர், இது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் கடைசி பிரச்சாரம் என தெரிவித்தார்.
தவெகின் அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய அவர், திமுக தான் அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் கூறினார். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், மதச்சார்பற்ற அணுகுமுறையைக் கொண்டவர் தான் என்றும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நண்பனாக இருப்பேன் என்றும், சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
திமுக மற்றும் பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், சிறுபான்மை வாக்குகளைப் பெற காங்கிரஸை பயன்படுத்துகிறார்கள் என்றும் விமர்சித்தார். தேர்தல் நாளில் மக்கள் அனைவரும் விரைவாக வந்து “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், எதிர்க்கட்சிகளை குறிவைத்து பேசிய அவர், தோல்வியைப் பயந்து சிலர் தங்கள் சொந்தத் தொகுதியை விட்டு வெளியே வர முடியவில்லை என்றும், தவெக சின்னத்தைத் திருடியதாகவும் குற்றம்சாட்டினார். “நான் நடிகன் தான், ஆனால் அரசியலில் நடிக்க வரவில்லை” என்று கூறிய அவர், இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கே போட்டி, திமுக மற்றும் தவெக என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, மக்களிடம் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தவெக வெற்றி நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக, மக்களிடம் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தவெக வெற்றி நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்தார்.
