விழுப்புரம் அருகே மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் நடைபெற்றது.
ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஏலம் தொடங்கியது. இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடிய சற்குணம் என்பவருக்கு 14 லட்சம் ரூபாய்கு ஏலம் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கிராம இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது