மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றிரவு நடைபெற்ற 34வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி-காக் 55 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 25 பந்தில் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் திரிபாதி 29 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
வெங்கடேஷ், திரிபாதி ஆகியோரின் அதிரடியால், கொல்கத்தா அணி 15.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த போட்டி சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.