முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

296
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.

2016 – 2021ம் ஆண்டுகளில் ஒரு கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 100 ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருக்கக்கூடாது என்றும், ஆனால் கே.சி.வீரமணி 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது அவரின் வருமானத்தைவிட 654 சதவீதம் அதிகம் எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள், பங்குதாரர் நிறுவனங்கள், நேர்முக உதவியாளர் வீடுகள் என மொத்தம் 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. கே.சி.வீரமணி வீட்டில் 14 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில், 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும்,  வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள், கணினி ஹார்டு டிஸ்குகள், சொத்து ஆவணங்கள், வீட்டு வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில், நேற்றிரவு சோதனை நிறைவடைந்த நிலையில், அவருக்கு சொந்தமான பிற இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.