அமெரிக்க – இந்திய வர்த்தகம் அடுத்த பத்தாண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று, அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில், இரு தரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, காந்தியடிகளின் கொள்கைப்படி, வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்காவின் தலைமை, உலகின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும் என்று கூறினார்.
இன்றைய உலகில் தொழில்நுட்பம் மிக முக்கிய சக்தியாக திகழ்கிறது என்றும், அத்தகைய தொழில்நுட்பம் மனித நேயத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு இந்தியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இந்தியா – அமெரிக்கா உறவு மேலும் வலுப்படும் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்க – இந்திய வர்த்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்றும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளை மாளிகைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான இந்திய வம்சாவளியினர் குவிந்திருந்தனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு காரில் வந்து இறங்கினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை, அங்கு திரண்டிருந்த இந்தியர்கள் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய முறையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.