இனி இதை செய்யாமல் விசா கிடைக்காது! இந்தியர்களுக்கு செக் வைக்கும் முக்கிய நாடு?

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளில், அந்நாட்டு அரசாங்கம் தற்போது ஒரு மிக முக்கியமான புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விசா கோரி விண்ணப்பிக்கும் நபர்கள், இனி கட்டாயமாக தங்களது கைரேகை மற்றும் முக அடையாளம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தவும், விசா நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளைத் தவிர்க்கவும், இந்தியாவோடு சேர்த்து மொத்தம் அறுபது நாடுகளில் இந்த புதிய பயோமெட்ரிக் விதிமுறைகள் கடந்த அக்டோபர் இருபத்தி ஆறாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த புதிய நடைமுறையின்படி, அக்டோபர் இருபத்தி ஆறுக்கு மேல் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே இந்த பயோமெட்ரிக் தரவுகளை வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

இந்த புதிய பயோமெட்ரிக் சோதனையை இரண்டு வழிகளில் சமர்ப்பிக்கலாம். ஒன்று, விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆஸ்திரேலிய பயோமெட்ரிக் சேகரிப்பு மையத்திற்கு நேரில் சென்று தங்கள் கைரேகை மற்றும் முக அடையாளத்தைப் பதிவு செய்யலாம்.

அல்லது, ஏற்கனவே தங்கள் பயோமெட்ரிக் தரவுகளைப் பதிவு செய்து, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், “ஆஸ்திரேலியன் இம்மி” என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமாகவே எந்தவொரு கட்டணமும் இன்றி தங்கள் தரவுகளை மிக எளிதாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் இந்த அனைத்து பயோமெட்ரிக் தரவுகளும், ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் தகவல் பாதுகாப்புச் சட்டங்களின்படி மிகவும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் என அந்நாட்டுத் தூதரகம் உறுதியளித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையால் விசா வழங்கும் நேரமெல்லாம் தாமதமாகாது என்றும், பயோமெட்ரிக் தரவுகளை எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சமர்ப்பிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் ஆஸ்திரேலியாவுக்குப் புதிய விசா அப்ளை செய்பவர்கள், ஆஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத் துறை அனுப்பும் மெயில்களையும், வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றி தங்களது பயோமெட்ரிக் தரவுகளை உடனுக்குடன் பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.

Related News

Latest News