Monday, February 10, 2025

பணிக்கு வரக்கூடாது : திடீர் அறிவிப்பால் கார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள BMW கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை யூபிஎஸ் என்னும் நிறுவனத்தின் காண்ட்ராக்ட் அடிப்படையில் மூன்று வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல பணிக்கு வந்த ஊழியர்களை திடீரென நாளை முதல் பணிக்கு வரக்கூடாது என தெரிவித்ததால் ஒப்பந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பணி வழங்கிய யுபிஎஸ் எனும் கான்டிராக்ட் நிர்வாகத்தின் மேலாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்ட போது புரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சாலையின் வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest news