தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு உருவாகியுள்ள நிலையில்,கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இந்தத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.இந்தத் தேர்தல் முடிவுகள் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உட்கட்சி பலவீனங்கள், அடிமட்ட தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, தலைமை மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல காரணங்களால் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளன
இந்த அரசியல் மாற்றத்தின் தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக உள்ள திமுகவின் ஆர். பிரியா இதுவரை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. அண்மையில் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இந்தப் பதற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் தவெக நிர்வாகிகள் மற்றும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிகார வரம்பைத் தாண்டி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதாகவும், தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், புதிய தவெக அரசு சென்னை மாநகரத்தின் நிர்வாகத்தில் தனது முத்திரையைப் பதிக்க விரும்புகிறது. சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் வேகமாக செயல்படத் திட்டமிட்டுள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள திமுக மேயர் பிரியாவுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார மோதல் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன
இந்த மோதல் வரும் காலங்களில் சென்னை மாநகராட்சி கூட்டங்களில் பலத்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைகள், நகர அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
