சென்னைக்கு அர்னாப் புயலால் பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? முக்கிய தகவல் இதோ…

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது புயலாக வலுப்பெற்று, நாளை மிகத் தீவிர புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் பாட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மாலைக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காத நிலையில், நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News