முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ தியேட்டருக்கு வருவது எப்போது?

திரையுலகில் இருந்து மக்கள் தலைவனாக, தமிழக முதலமைச்சராக அரியணை ஏறியிருக்கும் முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’. ஒட்டுமொத்தத் தமிழகமும், உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியைச் சுற்றி இப்போது ஒரு பரபரப்பான தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்த திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் (CBFC Clearance) கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போனது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை.

தற்போது, ‘டிஸ்ட்ரிக்ட் பை சொமாட்டோ’ (District by Zomato) மற்றும் ‘புக்மைஷோ’ (BookMyShow) போன்ற முன்னணி தளங்களில் ஜூன் 19ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக ஜூன் 19 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானால், அது ரசிகர்களுக்குப் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

இருப்பினும், படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா விபூதி பிரசாதத்துடன் ஒரு கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக இன்னும் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“விஜய் சார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, உண்மையான ‘ஜனநாயகன்’ ஆக மாறியிருப்பது எங்களுக்குப் மட்டற்ற மகிழ்ச்சி. சான்றிதழ் எந்த நேரத்திலும் கிடைக்கலாம், கிடைத்தவுடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிப்போம்” என்று அவர் கூறியுள்ளார். அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய விஜய், தனது சினிமா பயணத்தின் இந்த இறுதிப் பக்கத்தை ஜூன் மாதத்தில் எப்படி நிறைவு செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்தத் திரையுலகமே கண் இமைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News