வாட்ஸ் ஆப்-ஐ அலுவல் ரீதியாகவும், பள்ளி கல்லூரிகளின் தொடர்புக்காவும் என 296 கோடி பேர் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனை பிரைவேட் சேட்களுக்குப் பயன்படுத்துவோரும் ஏராளம்.
ரகசிய உரையாடல்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வாட்ஸ் ஆப் செயலிக்கே ஃபோல்டர் லாக் போட்டு வைத்த காலம் போய், ‘என்ட் டு என்ட் என்கிரிப்சன்‘ என்ற பிரைவஸி அப்டேட் செட்டிங்ஸை ஆன் செய்து விட்டனர் விவரம் அறிந்தவர்கள்.
அப்படியானால், அந்த குறிப்பிட்ட மெசேஜை அனுப்பியவர்களும், பெறுபவர்களும் மட்டுமே படிக்க முடியும். வேறு யாரும் ஹேக் செய்தோ, இடைமறித்தோ படிக்க முடியாது என்றுதான் நம்பப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை மார்க் இதுபற்றி வாய் திறக்கும் வரை.
வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெடா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வாட்ஸ் ஆப் பயனாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்க், சமீபத்தில் ‘த ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற பாட்கேஸ்டில் பேட்டியளித்தார். அதில் நேர்காணல் செய்த செய்தியாளர், தான் ரஷ்ய அதிபர் புதினை நேர்காணல் செய்யவிருந்ததாகவும், ஆனால் அதுகுறித்த வாட்ஸ் ஆப் சேட்-ஐ என்எஸ்ஏ மற்றும் சிஐஏ அதிகாரிகள் இடைமறித்து படித்து தடுத்துவிட்டதாகவும் மார்க்கிடமே பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மார்க், பெகாசஸ் (pegasus) என்ற ஸ்பைவேர் மூலம் சிஐஏ உள்ளிட்ட அரசின் உளவு அதிகாரிகள் எந்த ஒரு டிவைசையும் ஹேக் செய்து அதிலுள்ள சேட்டிங் ஹிஸ்ட்ரி, கால் ஹிஸ்ட்ரி ஆகிய தரவுகளைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட டிவைஸ் கையில் கிடைத்தால் அதைக் கொண்டு அரசின் உளவு அமைப்புக்கள் ரகசியத் தகவல்களை ஹேக் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
எனவே ‘என்ட்-டு-என்ட் என்கிரிப்சன்’ செய்திருப்பவர்கள் அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மெசேஜ் மாயமாக மறையும் வகையில் உள்ள டிஸ் அப்பியரிங் மெசேஜ் செட்டிங்கையும் ஆன் செய்து வைத்தல் மூலம் ரகசியத்தைக் கூடுதலாக காத்துக் கொள்ளலாம் என்ற சூப்பர் டிப்ஸையும் வழங்கியுள்ளார்.
இதேபோல் இந்திய உளவு அமைப்புக்களும் வாட்ஸ் ஆப் சேட்டிங் ஹிஸ்ட்ரியை உளவு பார்க்க முடியுமா? தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் நம்பந்தகுந்த ரகசியங்கள் மற்றும் வியூகப் பரிமாற்றங்களுக்கான களமாக வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.