தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தாவரங்களாக வளரும் விதத்தில் புதுமையான முறையில் அச்சடித்துள்ள அரசு அதிகாரியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஷாத் நகரைச் சேர்ந்தவர் சசிகாந்த் கோர் ராவத். ரயில்வே அதிகாரியான இவர் தன் திருமணத்தைப் புதுமையான முறையில் நடத்த விரும்பினார். அதன் ஒருபகுதியாகத் திருமணத்தன்று குறைந்த அளவில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது என்றும், திருமண அழைப்பிதழைக் குறைந்த செலவில் அச்சடித்து, அதன்மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் விரும்பினார்.
அவரின் இந்த யோசனைக்கு வருங்கால மனைவியும் சம்மதித்தார்.
அதன் அடிப்படையில், 3 வகைப் பூச்செடிகளின் விதைகளும், 3 வகைக் காய்கனிகளின் விதைகளும் திருமண அழைப்பிதழில் இடம்பெறுமாறு வித்தியாசமான முறையில் அச்சடித்தார்.
அந்த அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பார்த்து வியந்தனர். மனப்பூர்வமாக மணமக்களை வாழ்த்தினர்.
பொதுவாக, விருந்தினர்கள் பலரும் திருமணம் நடைபெற்றவுடன் அழைப்பிதழை அலட்சியமாக விட்டுவிடுவர் அல்லது குப்பையிலோ தெருவிலோ வீசியெறிந்து விடுவர். இனி, அப்படிச்செய்தாலும் அதுவும் ஒரு நன்மை தரும் செயலாகவே அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அழைப்பிதழில் 6 வகை தாவர விதைகள் உள்ளதால், அதனைப் பத்திரப் படுத்திக்கொள்வார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.