திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் ஆலாடு என்னும் கிராமம் உள்ளது.
இங்குள்ள ஏரிக்கரையில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் வசித்துவரும் அவர்கள் மாலை
6 மணிக்குமேல் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்கிற தகவல் அனைவரையும்
ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள
அட்டை ஆகிய அனைத்தும் உள்ளன. ஆனால், மின்சார வசதி இந்தக் கிராமத்தில் மட்டும்
செய்து தரப்படவில்லை. வீடுகளுக்கு மட்டுமன்றி, தெருவிளக்கு வசதிகூட இங்கு கிடையாது.
இதன் காரணமாக மாலை 6 மணிக்குமேல் வீட்டுக்குள்ளேயே
இருந்துவிடுகின்றனர். இருளில் வீட்டுக்குள் விஷப் பூச்சிகள், பாம்புகள் நுழைந்துவிடுவதால்
அச்சத்தின் பிடியிலேயே தவித்துவருகின்றனர்.
சூரிய வெளிச்சமே இவர்களுக்குத் துணையாக இருந்துவருகிறது. செல்போனுக்கு சார்ஜ்
ஏற்றவேண்டுமென்றால், 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச்
சென்றுவருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் பலர் பள்ளிப்படிப்பையே விட்டுவிட்டனர்.
போக்குவரத்து வசதியும் கிடையாது.
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லவேண்டுமென்றால் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்
பொன்னேரி நடந்தே வரவேண்டும்.
மின்சார வசதியும் போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே இந்தக் கிராமத்தின்
அதிமுக்கியத் தேவையாக உள்ளது. உடனடியாக நிறைவேற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
ஆவன செய்ய முன்வருவார்களா?