துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்னார் ராமானுஜ ஜீயர் பேசுகையில் : அண்மையில் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார். இது முற்றிலும் தவறான போக்கு மற்றும் கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்துகொண்டு மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக இந்து மதம் நம்புகின்ற சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது.
சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் கூறிக் கொள்வதுபோன்று தெரிகிறது. அமைச்சர்கள் எந்த மதமாக இருந்தாலும் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அமைச்சர் என்பவர் அமைச்சராக செயல்பட வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக பேசி ஜாதி, மத பிரச்சனைகளை தூண்டி விடும் சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் ஜீயர் தெரிவித்தார்.