Thursday, March 27, 2025

இனி ‘கட்டணத்தை’ சொல்ல மாட்டோம் Uber ‘அறிவிப்பால்’ பயணிகள் அதிர்ச்சி!

உபேர் நிறுவனம் இனி தங்களது ஆப்பில் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

உபேர் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பைக், ஆட்டோ, கார் பயணங்களை புக் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பயணம் உறுதியாகும் போதே, அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் உபேர் தெரிவித்து விடும்.

ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு மேல் கூடுதல் தொகை வாங்குவதை, டிரைவர்கள் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இந்தநிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ஸ்பெஷல் சப்ஸ்கிரிப்ஷன் திட்டமொன்றை உபேர் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஆட்டோ டிரைவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டி சப்ஸ்கிரிப்ஷன் செய்துகொள்ள வேண்டும். இதில் இணையும் டிரைவர்களிடம் பயணத்திற்கான கமிஷன் தொகை, ரத்தாகும் பயணங்களுக்கான கேன்சல் கட்டணம், GST கட்டணம் போன்றவற்றை உபேர் நிறுவனம் வசூல் செய்யாது.

இந்த புதிய திட்டத்தை பிப்ரவரி 18ம் தேதி, உபேர் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனால் இனி பயணிகள் ஆட்டோ புக் செய்தால், தோராயமாக அந்த பயணத்துக்கு ஆகும் தொகையை மட்டுமே உபேர் தெரிவிக்கும்.

இறுதி கட்டணத்தை, ஆட்டோ ஓட்டுநர் – பயணி இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும். அதாவது கட்டணத்தை குறைக்க பயணிகள் பேரம் பேசலாம். அதேபோல உபேர் ஆப் வழியாக ஆட்டோ பயணங்களுக்கு பயணிகள் இனி கட்டணம் செலுத்த முடியாது.

பணமாகவோ அல்லது UPI ஆப் வழியாகவோ தான் செலுத்த முடியும். ஆட்டோ புக் செய்வதற்கு முன்னர் தங்களது, உபேர் டிஜிட்டல் கட்டணங்களை பயணிகள் முடக்கி வைக்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயணத்தொகை முழுவதும் கிடைக்கும். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக உபேர் தெரிவித்து இருக்கிறது.

இதைப்பார்த்த வாடிக்கையாளர்கள், ”சும்மாவே ஆட்டோக்காரங்க எக்ஸ்ட்ரா காசு கேட்பாங்க. இனி சொல்லவே வேண்டாம். அவங்க காட்டுல மழை தான்,” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Latest news