தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் தொடங்கிய இந்த பணியில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 111 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. இதனால், கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.
சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் கட்சி கொடிகளை அசைத்து, கோஷங்கள் எழுப்பி, நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் அவர்களின் நீலாங்கரை இல்லத்தில் சிறப்பு வருகையும் இடம்பெற்றுள்ளது. நடிகை திரிஷா விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின்னர் நேரடியாக விஜய் இல்லத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இன்று திரிஷாவின் பிறந்தநாளும் என்பதால், இந்த சந்திப்பு மேலும் கவனம் ஈர்த்துள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை அரசியல் மற்றும் பொது வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
]
