2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
அவற்றில், போலீஸ் வாகனத்தின் மீது நின்றபடி துப்பாக்கியை ஏந்தியிருந்த காவலரின் புகைப்படம் பெரும் கவனம் பெற்றது. பின்னர் அந்த காவலர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய ராஜா என்பது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையிலும் இந்தக் காட்சிகள் முக்கியத்துவம் பெற்றன.
இந்நிலையில், காவலர் ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 29-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ராஜாவின் மரணம் மீண்டும் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளது.
