தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவவதாக குறிப்பிட்டுள்ள போக்குவரத்துக் கழகம், கூடுதலாக 104 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.