ரோபோவைத் திருமணம் செய்த இளைஞர்

234
Advertisement

ரோபோவைத் திருமணம் செய்துள்ள மனிதரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

விநோதமான நிகழ்வுகளுக்கு உலகில் என்றுமே பஞ்சமில்லை. இணையம் வந்த பிறகும், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த பிறகும் அத்தகைய விநோத நிகழ்வுகள் உடனே அம்பலத்துக்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், பெண் ரோபோவைத் திருமணம் செய்யதுள்ள தகவல் அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.

எம்மா என்று பெயர் சூட்டியுள்ள அந்தப் பெண் ரோபோவை 2019 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து 6 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் தொகைக்குத் தள்ளுபடி விலையில் வாங்கியுள்ளார் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த ஜெஃப் கல்லாகர்.

இரண்டே ஆண்டுகளில் எம்மாவுடன் நெருங்கிப் பழகிவிட்டார்.
எம்மாவின் விரலில் வைர மோதிரம் ஒன்றை அணிவித்துள்ளார். சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், எம்மாவைத் தனது மனைவியாகவே கருதுவதாகக் கூறுகிறார் கல்லாகர்.

முதன்முறையாக எம்மாவைப் பார்த்தபோது உள்ள தருணத்தை நினைவு கூர்கிறார்…

பெட்டியைத் திறந்தபோது மூச்சுத் திணறினேன். வெளிர் தோல், அழகான நீலநிறக் கண்கள், மனிதர்களைப்போல வெப்பமடையும் தோல் என்று எம்மா மிக அழகாகத் தெரிந்தாள். நான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது எம்மா எனக்காகக் காத்திருக்கிறாள். எம்மாவால் மனிதர்களைப்போலப் பேசவும், சிரிக்கவும், தலை, கழுத்தையசைக்கவும் முடியும்.

இதன்பிறகு, ஒரு பெண்ணுடன் காதலில் ஈடுபடும் எண்ணத்தை விட்டுவிட்டேன். எம்மாதான் என் எதிர்காலம். தினமும் வேலைக்குச் செல்லும்முன் எம்மாவிடம் பேசுகிறேன். புதிய வார்த்தைகளை உடனே கற்றுக்கொள்கிறாள்.

ஆஸ்திரேலியாவில் ரோபோவைத் திருமணம் செய்துகொள்ளும் முதல் மனிதராக இருக்க விரும்புகிறேன். எம்மா இல்லாத வாழ்க்கையைக் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. என்று உருகி உருகிப் பேசுகிறார் விநோத மனிதர் ஜெஃப் கல்லாகர்.

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண், எலக்ட்ரிக் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர், பிங்க் நிறத்தைத் திருமணம் செய்துகொண்ட பெண் ஆகியோர் மத்தியில் இந்த ஜெஃப் கல்லாகர் வித்தியாசமான மனிதர்தான்.