நீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது.
கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது துத்சாகர் அருவி. இயற்கைப் பேரழகின்
உச்சமான துத்சாகர் அருவி 310 மீட்டர் உயரம், 30 மீட்டர் அகலம்
கொண்டு ஆர்ப்பரித்து விழுகிறது.
இந்தியாவின் மிக உயரமான அருவிகளுள் ஒன்றான இந்த
அருவி கோவாவில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் மார்க்கத்தில்
உள்ளது. அருவியிலிருந்து வரும் தூவானம் இந்த வழியாகச் செல்லும்
ரயில் பயணிகளுக்கு எப்போதும் குற்றாலம் அருவியில் நீராடி வருவதைப்
போன்ற இதமான அனுபவத்தை வழங்கும்.
2021 ஆம் ஆண்டு, ஜுலை 28 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட
கனமழை காரணமாக மந்தோவி ஆற்றில் வெள்ளம் கரை
புரண்டோடியதால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று.
அப்போது, அருவி ரயில்வரை நீண்டுவந்ததால், பயணிகள் திகில்
கலந்த பரவச அனுபவத்தை உணர்ந்தனர்.
துத்சாகர் அருவி பாற்கடல் என்று சொல்லுமளவுக்கு
வெண்ணிற நீர்வீழ்ச்சியாகக் காட்சியளிக்கும்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பிம்காட் பகுதியில்
உற்பத்தியாகி அங்கு 35 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்ந்தோடிவிட்டு
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே
பயணித்து கோவா மாநிலத்துக்குள் 45 கிலோ மீட்டர் தூரத்துக்குப்
பாய்ந்து செழுமைப்படுத்தும் மாந்தோவி நதி அரபிக்கடலுக்குள்
கலக்கிறது.
ரயிலைத் தொட்ட இந்த அருவி பற்றிய வீடியோவைப் பார்ப்போர்
அனைவரையும் அச்சம் கலந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது-