ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யாததால் இறந்து பிறந்த சிசுவின் உடலை இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் வைத்து எடுத்து சென்ற அவலம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேச மாவட்டம் சிங்ரவுலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மாவட்ட மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெறுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தனியார் கிளினிக் சென்ற தம்பதியிடம் 5,000 ரூபாய் பணம் செலுத்தும்படி ஊழியர்கள் கேட்டுள்ளனர்.தன்னிடம் 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக தினேஷ் பாரதி கூறியுள்ளார்.
5,000 ரூபாய் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை அளிப்போம் என, தனியார் கிளினிக் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.பணத்துடன் அடுத்த நாள் சென்றதும், மீனா பாரதிக்கு, ‘அல்ட்ரா சவுண்ட்’ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு தனியார் கிளினிக் ஊழியர்கள் தெரிவித்தனர்.மாவட்ட மருத்துவமனைக்கு வந்த மீனா பாரதிக்கு சிகிச்சை தரப்பட்டு இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.இதையடுத்து, தன் இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் இறந்த குழந்தையை துணியில் சுற்றி, அந்த தம்பதி எடுத்து சென்றனர். நேராக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் அளித்துள்ளனர்.
குழந்தை எங்கே என அதிகாரிகள் கேட்டதும், பைக் பெட்டியில் இருந்து குழந்தையை எடுத்து காட்டியபோது அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.