தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்கள், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மே 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, சினிமாத்துறை தொடர்பாக அவர் எடுத்துள்ள இந்த முதல் முக்கிய முடிவு, இப்போ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் மே 14-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு, காலை 9 மணி சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலால் சூர்யா மற்றும் த்ரிஷா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பொதுவாகவே பெரிய படங்களுக்கு அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் இருந்த சிக்கல்களைக் கலைந்து, முதல்வர் வழங்கிய இந்த அனுமதியைப் படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது. அதில், “எங்கள் படத்திற்கு 9 மணி சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய கௌரவத்திற்குரிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். இதனுடன் சூர்யா மற்றும் த்ரிஷா தரப்பிலிருந்தும் முதல்வருக்கு வாழ்த்துச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, கடந்த மே 10-ஆம் தேதி நடந்த முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா நேரில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல், நடிகர் சூர்யாவும் “தமிழக மக்கள் என் நண்பன் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், அவரது புதிய அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று உருக்கமாக வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபியங்கர் இசையில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமாவாக உருவாகியுள்ளது. நீண்ட காலமாக நீதி கிடைக்காமல் தவிக்கும் ஒரு தாத்தா மற்றும் அவரது பேத்திக்காக, த்ரிஷா ஒரு வழக்கறிஞராகப் போராடும் கதையை இந்தத் திரைப்படம் பேசுகிறது. இதில் சூர்யா ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் இந்தத் திடீர் அறிவிப்பு, இனிவரும் பெரிய படங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
