மியாவ் சத்தம் பூனையை அதன் உரிமையாளருடன் இணைய உதவியுள்ளது.
இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரேச்சல் லாரன்ஸ். தனது வீட்டில் பர்னமி எனப் பெயரிடப்பட்ட பூனையை வளர்த்து வந்தார். அவரது குழந்தைகள் ஃபேட்மேன் என செல்லமாக அந்தப் பூனையை அழைத்துவந்தனர். ஒரு நாள் பூனை காணாமல் போய்விட்டது. இதனால், தவித்துப் போய்விட்டனர் ரேச்சல் லாரன்சும் அவரது குழந்தைகளும்.
இந்த நிலையில், பெண் கால்நடை மருத்துவர் ஒருவரை ரேச்சல் சந்திக்க நேர்ந்தது. அப்போது கால்நடை மருத்துவரின் இல்லத்தில் ஒரு பூனை சுற்றித் திரிந்துகொண்டு இருந்தது. அதைப் பார்த்த ரேச்சல், இது உங்கள் பூனையா என்று மருத்துவரிடம் கேட்டார்.
அதற்கு மருத்துவர், இல்லை. ஒரு வாரத்துக்கு முன்பு வழிதவறி எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டது என்று கூறினார்.
அதன்பிறகு தனது இல்லத்துக்குத் திரும்பிவிட்டார் லாரன்ஸ். என்றாலும், பூனையின் ஞாபகமாகவே இருந்துள்ளார்.
2 மணி நேரம் கழித்துக் கால்நடை மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். எதிர்முனையில் டாக்டர் பேசியபோது மியாவ் என்ற குரலை லாரன்ஸ் கேட்டுள்ளார். அந்த மியாவ் சத்தம் தனது பூனையின் குரல்தான் என்பதை உணர்ந்தார்.
உடனே டாக்டரின் வீட்டுக்குச் சென்றார். அப்போது பர்னமியும் தனது எஜமானரை அடையாளம் கண்டுகொண்டு தொந்தரவு செய்தது.
அதைத் தொடர்ந்து தனது பூனையின் இதர அடையாளங்களைக்கூறி பர்னமியைத் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.
காணாமல்போன தன் பூனையை 8 மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி மூலம் எஜமானர் கண்டுபிடித்த விநோத சம்பவம் பரபரப்பாகியுள்ளது.