தன்னையே காணவில்லை என்று தேடிய நபர்

375
Advertisement

தன்னையே காணவில்லை என்று தேடிய நபர் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது-

சினிமாவை விஞ்சும் இந்த சுவாரஸ்ய சம்பவம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது.

துருக்கி நாட்டின் புருஷா மாகாணத்தைச் சேர்ந்தவர் பேஹான் முட்லு. 50 வயதாகும் இவர் அங்குள்ள சய்யாகா என்னுமிடத்தில் கட்டுமானப் பணி செய்து வந்தார்.

சமீபத்தில் மது அருந்துவதற்காகத் தனது நண்பர்களுடன் அங்குள்ள இனிகால் என்னும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றிருக்கிறார். இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து முட்லு மது அருந்தியுள்ளார்.

மது அருந்திய மயக்கத்தில் அனைவருமே காட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். முட்லுவோ அதிகமான போதையில் இருந்துள்ளார். இதனால், தான் வேலைசெய்துவந்த வில்லாவில் சென்று படுத்துக்கொண்டார். இதை அவரது நண்பர்கள் கவனிக்கவில்லை.

ஆனால், காட்டைவிட்டு வெளியே வந்தபோது தங்களுடன் வந்த முட்லுவைக் காணாமல் நண்பர்கள் திடுக்கிட்டனர். அப்போது நன்கு இருட்டிவிட்டதால், மீண்டும் காட்டுக்குள் சென்று தேடப் பயந்துள்ளனர். உடனே, முட்லு செல்போனைத் தொடர்புகொண்டுள்ளனர். ஆனால், அவரது செல்போனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து காவல்துறை காட்டுக்குள் சென்றது. புகார்கொடுத்த முட்லுவின் நண்பர்களும் போலீசாருடன் சென்றனர். காட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு வந்தார் முட்லு.

அவர் போலீசாரிடம், ”யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்க, அதற்குப் போலீசார், ”நண்பர்களுடன் வந்த ஒருவரைக் காணவில்லை. அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

உடனே, ”நானும் உங்களோடு சேர்ந்து தேடுகிறேன்” என்றுகூறி தேடத் தொடங்கியுள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தேடும் படலம் நடந்தது- அப்போது அங்கிருந்த போலீசாரில் ஒருவர், ”பேஹான் முட்லு எங்கே இருக்கிறீர்கள்?” என்று குரல் கொடுத்திருக்கிறார்.

அவ்வளவுதான்…

தன்னைத்தான் போலீசார் தேடுகின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட முட்லு, ”சார் நான் இங்கேதான் இருக்கிறேன்” என்று பயத்துடன் குரல்கொடுத்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தனர் போலீசார்.

இதனால் போலீசாரிடம் கெஞ்சத் தொடங்கினார் முட்லு… ”சார்….நான் குடிச்சது தெரிந்தால் எங்கப்பா என்னைக் கொன்றே விடுவார்.. தயவுசெய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்றார் அப்பாவியாக.

அவரைக் கடுமையாக எச்சரித்த போலீசார் முட்லுவை நண்பர்களிடம் ஒப்படைத்தனர்.

முட்லுவின் செயலால் அவரது நண்பர்களும் போலீசாரும் கோபமடைந்தாலும், அவரது விநோத நடவடிக்கை மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது-

‘முட்லு’ என்பதற்கு துருக்கி மொழியில் ‘மகிழ்ச்சி’ என அர்த்தமாம்.