நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை வென்றது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவளித்தன. இதையடுத்து கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்தது. தொடர்ந்து ஆளுநர் அழைப்பின் பேரில், தவெக தலைவர் விஜய் மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டு முதலைமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கும் அவரது மனைவி சங்கீதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. விஜயின் தரப்பில் அவரது பெற்றோர் சந்திரசேகர் – ஷோபா இருவரும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் இயக்குநரும், முதலமைச்சர் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய், ”ஒவ்வொரு வலிமையான ஆன்மாவின் பின்னாலும், அதை முதலில் செதுக்கிய தாயின் அன்பு இருக்கிறது” என்று தெரிவித்து அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் முதல் அமைச்சராக பதவியேற்ற மே 10ம் தேதி தான் அன்னையர் தினம் என்பதால், சஞ்சய் தன்னுடைய அம்மா சங்கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த மெசேஜை தெரிவித்து இருக்கிறார்.
அவரது இந்த பதிவில் #JasonSanjai #SangeethaSornalingam #MothersDay ஆகிய வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன. சஞ்சயின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ” அன்னையர் தினத்துக்கு அருமையான மெசேஜ்”, என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
