மகனுக்காக மரத்தாலான காரை ரோல்ஸ் ராய் காரைத் தந்தை தயாரிக்கும் வீடியோ இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
குழந்தையின் வாழ்க்கைக்கான வெற்றியின் பெருமை தாய்க்கு மட்டுமே உரித்தானது அல்ல. குழந்தையின் மகிழ்ச்சிக்காக, சிறப்பான எதிர்காலத்துக்காகத் தந்தையும் தியாகம் செய்கிறார் என்பதை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது.
இந்த உண்மையை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரு தந்தையின் செயல்.
சமீபத்தில் தனது மகனுக்காக மரத்தாலான ரோல்ஸ் ராய் காரை உருவாக்கி அசத்தியுள்ளார் அவர்.
தனது குழந்தையின் தேவைகளையும் விருப்பங்களையும் நன்கு உணர்ந்துள்ளார் வீடியோவில் காணும் தந்தை. குழந்தையின் விருப்பங்களை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
முதலில் கார் தயாரிப்பதற்கான மரத்தைப் பற்றி விசாரித்துத் தேடிக்கண்டுபிடித்து, மரக்கட்டைகளை ஒன்றாக இணைத்து, சாலையில் காரை இயக்கத் தேவையான அத்தனை பாகங்களையும் காரில் பொருத்தினார்.
அதன்பலனாக, வெறும் 68 நாட்களில் மரத்தாலான காரை உருவாக்கி மகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் அந்தத் தந்தை.
மகனுக்காக முழுமையான ரோல்ஸ் ராய் காரை மரத்தில் உருவாக்கிய பெருமிதத்தோடு அதனைப் பரிசளித்தார் தியாகத் தந்தை. முதன்முதலில் அந்த மரக் காரில் மகனும் தந்தையும் மனம் நிறைவாகப் பூரிப்போடு பயணிக்கத் தொடங்கினர்.
தந்தைதானே எல்லாக் குழந்தைகளுக்கும் ரோல் மாடல்….