வாயோடு வாய் வைத்து…குரங்குக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய டிரைவர்

271
Advertisement

பெரம்பலூர் அருகே காயமடைந்து உயிருக்குப் போராடிய குரங்குக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராகிவருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் அருகேயுள்ள சமத்துவபுரம் பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி 8 மாதக் குரங்கு ஒன்று திரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த அப்பகுதியிலுள்ள நாய்கள் குரங்கைத் துரத்தித் துரத்திக் கடிக்கத் தொடங்கின.

இதில் குரங்கின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டன. இதனால் பயந்துபோன குரங்கு மரத்தின்மீது ஏறித் தப்பியுள்ளது. அதேசமயம் நாய்கள் கடித்ததால் மயக்கமான நிலையில் இருந்துள்ளது.

இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான பிரபு, குரங்கைக் கீழே வரவழைத்து தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், குரங்கால் தண்ணீரைப் பருக முடியவில்லை. மயக்கமடையும் நிலைக்குச் சென்றது.

இதனால் பதறிப்போனார் பிரபு. உடனடியாக சமயோசிதமாக செயல்படத் தொடங்கி குரங்கு மார்பின்மீது கைவைத்து அழுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்க முயன்றார். அத்துடன் குரங்கின் வாய்மீது வாய் வைத்து ஊதி செயற்கை சுவாசம் செய்து முதலுதவி செய்துள்ளார்.

அதையடுத்து ஓரளவு மயக்கம் தெளிந்தது குரங்கு. உடனடியாகத் தனது டூ வீலரில் பெரம்பலூர் கால்நடை மருத்துவனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அங்கு குரங்குக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு குளுக்கோசும் ஏற்றப்பட்டது. சிகிச்சை பலனளித்தது. குரங்கு கண்விழித்துப் பார்த்தது.

அதைத் தொடர்ந்து கலெக்டர் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.

குரங்குக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய கார் டிரைவர் பாபுவின் மனியநேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பாபு முதலுதவி பற்றிப் பயின்றுள்ளார்.

விலங்குகள் உணவுக்காகக் காடுகளில் இருந்து நகரங்களுக்குள் வருகின்றன. வீட்டில் மீதமாகும் உணவை அவற்றுத் தரலாம் என்கிறார் பிரபு.