8,000 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், நாட்டைவிட்டு வெளியேறவும் ஒருவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நோம் ஹுப்பர்ட். 44 வயதாகும் இவர் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றில் ரசாயனப் பகுப்பாய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு ஹுப்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரின் மனைவி 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது சொந்த நாடான இஸ்ரேலுக்குச் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து ஹுப்பரும் 2012 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.
ஆனாலும், கோபம் தணியாத அவரது மனைவி இஸ்ரேல் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 குழந்தைகளுக்கும் 18 வயதாகும்வரை ஹுப்பர் இஸ்ரேலைவிட்டு வெளியேறத் தடைவிதித்தது.
அத்துடன், குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதந்தோறும் 5 ஆயிரம் ஷேக்கல்ஸ் தொகைவீதம் மொத்தமாக 3 லட்சத்து 35 ஆயிரம் அமெரிக்க டாலர் தொகையை மனைவியிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தத் தொகையை செலுத்தத் தவறினால் வேலைக்காகவோ, விடுமுறைக்காகவோ நாட்டைவிட்டு வெளியேறவும் தடைவிதித்தது.
இந்த உத்தரவைக் கடைப்பிடிக்காவிட்டால் டிசம்பர் 31ஆம் தேதி, 9999 ஆம் ஆண்டுவரை சிறைக்குள் அடைக்கப்படுவார் அதாவது, 8 ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளித்துள்ளது.