ஃபுட்பால் விளையாட்டை நிறுத்திய பூனை

274
Advertisement

சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று திடீரென்று கால்பந்து மைதானத்துக்குள் புகுந்து வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷையர் பகுதியில் ஷெஃப் பீல்டு நகரிலுள்ளது ஹில்ஸ்பரோ விளையாட்டு மைதானம். கிட்டத்தட்ட 40 ஆயிரம்பேர் அமர்ந்து போட்டியைக் கண்டுகளிக்கும் வசதிகொண்டது அந்த மைதானம். சில நாட்களுக்குமுன் அந்த மைதானத்தில் கால்பந்து லீக் போட்டி நடந்தது.

அதில் ஷெஃபீல்டு புதன் அணியும், விகன் அத்லெட் அணியும் மோதின. போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்குள் பூனை ஒன்று அதிரடியாகப் புகுந்து வீரர்களுக்கு ஆட்டம் காட்டத் தொடங்கியது. இதனால் வீரர்கள் சில நிமிடங்கள் ஆட்டத்தை நிறுத்தினர்.

குறுக்கும் மறுக்கும் ஓடிய அந்தப் புதிய வீரரைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். கால்பந்தை எளிதாக எட்டி உதைக்கும் வீரர்கள் பூனையின் ஆட்டத்தால் தவிப்புக்கு உள்ளாகினர். கடைசியாக விகன் அத்லெட் அணியின் வீரர் அந்தப் பூனையைப் பிடித்துவிட்டார்.

பிடிபட்டபோது அந்தப் பூனையின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன. உடனடியாகக் கால்நடை மருத்துவரிடம் கொண்டுசெல்லப்பட்டு பூனைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது பூனையின் உடம்பில் மைக்ரோ சிப் ஒன்று பொருத்தப்பட்டிருந்ததை மருத்துவர் கண்டறிந்தார். அதனைக்கொண்டு அந்தப் பூனையைப் பற்றிய விவரம் தெரியவந்தது.

அந்தப் பூனையின் பெயர் டாப்ஸி என்பதும், டாப்ஸியின் உரிமையாளர் அலிசன் ஜுப் என்னும் பெண் என்பதும் தெரியவந்தது.

கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் டாப்ஸி காணாமல் போனபோது, அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், இறந்துவிட்டதாக அலிசன் ஜுப் கருதியுள்ளார். அதனால், அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.

தற்போது தனது செல்லப் பூனையைக் கண்டுபிடித்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியில் உள்ளார் ஜுப்.