எஜமானரின் கல்லறைவிட்டுச் செல்ல மனமில்லாமல், 2 மாதங்களாக கல்லறைமீதே அமர்ந்திருக்கும் பூனையின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமான செல்லப்பிராணிகளில் என்றும் முதலிடம் வகிப்பது நாய்கள்தான். என்றாலும், அவற்றையும் மிஞ்சியுள்ளது இன்னொரு செல்லப்பிராணியான பூனையின் செயல்.
செர்பியாவைச் சேர்ந்தவர் முஃப்திஜா மௌமர் ஜுகோர்லி. அந்த நாட்டின் பிரபலமான மனிதரான இவர் 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணமடைந்துவிட்டார்.
எஜமானர் இறந்த பிறகும் அவரை விட்டுப் பிரிய மனமில்லாத அவரது வளர்ப்புப் பூனை, தனது எஜமானரின் கல்லறைமீதே இரண்டு மாதங்களுக்கும் மேலாக சோகமாக அமர்ந்திருக்கிறது.
இறுதிச்சடங்கு நடந்த 2 மாதங்களுக்குப் பிறகும் பூனை வெளியேற மறுத்த செயல் மனிதர்களின் இதயத்தை வருடிவருகிறது. அதேசமயம், மரணமடைந்த முஃப்திஜாவின் வீடு, அவரது கல்லறையிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது எனக் கூறப்படுகிறது.
விசுவாசத்தைப் பற்றிப் பேசினால், நாய்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதை நிரூபித்துள்ளது இந்தப் பூனையின் செயல்.
இந்தப் பூனையை யாராவது தத்தெடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை தற்போது வலைத்தளங்களில் வலுப்பெற்று வருகிறது.