ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு மஜ்கி. இவரது சகோதரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். உயிரிழந்த தங்கையின் வங்கிக் கணக்கில் அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக சந்துரு மஜ்கி வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் அவரது சகோதரி இறந்ததற்கான இறப்புச் சான்றிதழ் அல்லது அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ ஆதாரங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் சந்துரு மஜ்கி உள்பட அங்குள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல நேரங்களில் இறப்புச் செய்தியை முறையாகப் பதிவு செய்வதில்லை. இதனால் சந்துரு மஜ்கியிடம் உடனடி சான்றிதழ் இல்லை. வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டு வற்புறுத்தியதாகவும், அவர் சொன்ன காரணங்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்குத் தனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற விரக்தியில், சந்துரு மஜ்கி ஊர் மக்கள் முன்னிலையில் இடுகாட்டிற்குச் சென்று, அடக்கம் செய்யப்பட்ட தனது சகோதரியின் உடலை (எலும்புக்கூடாக மாறிய நிலையில்) தோண்டி எடுத்துள்ளார். தோண்டியெடுத்த அந்த எலும்புகளை ஒரு மூட்டையில் கட்டி, அதை ஆதாரமாகக் காண்பிக்க முயன்ற சம்பவம் காண்போரின் நெஞ்சைப் பதற வைத்தது.
