டெல்லியின் ஹரி நகரை சேர்ந்தவர் நவ்ஜத் சிங் (வயது 52). இவர் மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நவ்ஜத் சிங் நேற்று மாலை டெல்லி கண்டோன்மண்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள ரிங் ரோடு பகுதியில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் நவ்ஜத் சிங்கின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த நவ்ஜத் சிங்கும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களில் நவ்ஜத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவ்ஜத் சிங்கின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விபத்தை ஏற்படுத்தியது மற்றும் தனது கணவர் படுகாயமடைந்தபோதும் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கமால் வேனில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் உறவினரின் மருத்துவமனையில் அனுமதித்தது, இதனால் ஏற்பட்ட கால தாமதமே தனது கணவரின் உயிரிழப்பிற்கு காரணம் என நவ்ஜத் சிங்கின் மனைவி போலீசில் தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் பரிக்ஷித் மங்கர் மற்றும் அவரது மனைவி ககன்பிரீத் மீது புகார் அளிக்கப்பட்டது. லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்ற ககன்பிரீத்தை மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தபின் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
