முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. டாஸ்மாக் குறித்து வெளியான முக்கிய தகவல்…

இந்தியாவில் பல மாநில அரசுகள் மதுபான விற்பனை மூலம் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றன. எரிபொருள் மற்றும் மதுபானம் ஜிஎஸ்டி வரம்புக்குள் இல்லாததால், அவற்றின் மீதான வரி விதிப்பதில் மாநில அரசுகளுக்கு தனி அதிகாரம் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தனியார் மதுபானக் கடைகள் மூடப்பட்டு, அரசு சார்பில் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 டாஸ்மாக் கடைகள் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் செயல்படும் கடைகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கலுக்குப் பிறகும் அரசின் வருவாய் குறையாது என்பதற்காக, கர்நாடகாவில் நடைமுறையில் உள்ள உரிமம் (லைசன்ஸ்) வழங்கும் முறை பின்பற்றப்படலாம். அதன்படி, தனியார் நிறுவனங்கள் அரசிடம் இருந்து உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டும். இதன் மூலம் உரிமக் கட்டணம் மற்றும் மதுபான விற்பனை வரி ஆகிய இரு வழிகளிலும் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் கிராமப்புற டாஸ்மாக் கடைகளையும் தனியார்மயமாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

Latest News