இறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்

466
Advertisement

செல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்ப
உறுப்பினரைப்போல அஞ்சலி செலுத்தி இறுதிக்கடன்களைச் செய்து
நன்றியுடன் தங்கள் கடமையைச் செய்துள்ளது கர்நாடக முதல்வர் பசவராஜ்
பொம்மையின் குடும்பம்.

செல்லப் பிராணியான நாயின் பிரிவை அதனை வளர்ப்போரால்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தன் வளர்ப்பு நாய் இறந்துபோனதால்
துக்கம் தாளாமல் கர்நாடக முதலமைச்சர் கதறியழுத வீடியோ சமூக
வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய கர்நாடக முதலமைச்சராக இருப்பவர் பசவராஜ் பொம்மை.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இவர் எடியூரப்பாவின் ராஜினாமாவுக்குப்
பிறகு அப்பதவிக்கு வந்தார். இவரின் வளர்ப்பு நாய் அண்மையில் இறந்துவிட்டது.

நாயின் இறப்பைத் தாங்க முடியாத பசவராஜ் துக்கத்தைக் கட்டுப்படுத்த
முடியாமலிருக்கிறார். சட்டென்று கீழே குனிந்து நாயின் முகத்தில் உச்சிமோந்து
முத்தமிடுகிறார். பின்னர் வாஞ்சையுடன் சடலத்தை வருடிக் கொடுக்கிறார்.

அதையும் மீறி பொங்கி வழியும் கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக்கொள்கிறார்.
பின்னர், நாயை வணங்கிவிட்டு நகர்ந்துசெல்ல அவரது குடும்பத்தினரும் வாஞ்சையோடு
அஞ்சலி செலுத்துகின்றனர்.

நாய் நன்றியுள்ள பிராணி என்பது தெரிந்ததுதான். உயிரோடிருக்கும்வரை செல்லமாகக்
கொஞ்சிவிட்டு இறந்த பிறகு அலட்சியத்தோடு விட்டுவிடாமல் அந்தப் பிராணிக்கு
மரியாதை செய்து அடக்கம் செய்துள்ளது கர்நாடக முதல்வரின் குடும்பம்.